
நேற்று....
காலை ஆறுமணி
எழுந்திரு என்றாள் அம்மா!
எட்டவில்லை என் காதுக்குள்
எழுந்து பாயைச் சுருட்டடீ என்றாள்
எங்கே டீ என்றேன் நான்
குளி போ சீக்கிரம் என்றாள்
குத்துகல்லாய் நின்றேன் நான்
சீக்கிரம் கிளம்பு ஸ்கூலுக்கு என்றாள்
சிரித்து கெக்கலித்தேன் நான்!
மாலை மெதுவடையுடன் அம்மா!
பஜ்ஜி எங்கே? என்று பதறடித்தேன் அவளை
படி படி என்றாள் அம்மா
படித்தேன் நான் கதைப்புத்தகங்களை!
வீட்டுவேலை கற்றுக்கொள் என்றாள்
விடம்மா என்றேன் நான்
கடமைகளை முடித்து
களைப்பாய் வந்தாள் அம்மா!
கதை சொல் என்று படுத்தியெடுத்தேன் நான்
முற்பகல் செய்யின்
பிற்பகல் விளையும் என்றாள்!
ஏட்டுச்சுரைக்காய் என்றேன்!!!
இன்று....
ஏழு மணி ஆயிற்று எழுந்திரு என்றேன்
நேரம் பார்க்கத் தெரியுமா உனக்கு என்றாள்
எழுந்து பாயைச் சுருட்டு என்றேன்
பட்டென்று காலை உதைத்து
எங்கே காபி என்றாள்!
முற்பகல் செய்யின்.....
பிற்பகல் விளையும்!...
என்றேன் நான்!